புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனான பிரதமர் மோடியின் பிரிவு உபசார கட்டிப்பிடிப்பு தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 26ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்கு 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்காக பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் நேரில் வந்து வழியனுப்பி வைத்தனர். அப்போது இரு நாட்டு தலைவர்களும் சுமார் 15 நொடிகள் நீண்ட நேரம் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது நட்பை வெளிப்படுத்தினர்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தச் சந்திப்பு முடிந்த 48 மணி நேரத்திற்குள், அதாவது நேற்று (பிப். 28) ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதலைத் தொடங்கின. இதனால் பிரதமர் மோடியுடனான 15 நொடிகள் கட்டிப்பிடிப்பின் போது, ஈரான் மீதான தாக்குதல் திட்டமிடல் குறித்து நெதன்யாகு ரகசியமாக மோடியின் காதில் கூறியிருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த நிகழ்வை ‘மோடி கட்டிப்பிடிப்பு’ என்று குறிப்பிட்டதோடு, ‘இது வெறும் நடிப்பு கிடையாது, இருவருக்குமான உண்மையான நட்பின் அடையாளம்’ என்று தெரிவித்தார். தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றதை காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். வரவிருக்கும் போர் குறித்து முன்னரே தெரிந்தும், பிரதமர் மோடி அங்கு சென்று இஸ்ரேலுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியது ‘தார்மீகக் கோழைத்தனம்’ என்று அவர் சாடியுள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல், இந்திய அரசு தரப்பிலிருந்தும் ரகசியத் தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
