பர்னாலா: பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் நேற்று, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இந்தியா – அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விவசாய துறை தொடர்பான கருத்து வேறுபாடுகளால் முடங்கி கிடந்தது. ஆனால், நான்கு மாதங்களாக முடிக்காத பணிகள் வெறும் 15 நிமிடங்களில் முடிக்கப்பட்டது எப்படி? அதற்கான அவசரம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “அமைச்சரவை, விவசாய அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை கலந்தாலோசிக்காமல், பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்பை அழைத்து, இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராக இருப்பதாக கூறினார். இந்திய விவசாய துறையின் கதவை அமெரிக்காவுக்கு மோடி திறந்து விட்டார். இதனால் அமெரிக்க பொருள்கள் இந்திய சந்தைக்குள் வருவதுடன், அனைத்து மாநில விவசாயிகளும் நாசமாகி விடுவார்கள்” என்றார்.
