பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது: பெருமை பாராட்டிய அதிபர் டிரம்ப்

நியூயார்க்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வெடித்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பாக நியூயார்க்கில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அதிபர் டிரம்ப், ‘‘பாகிஸ்தானுடன் நான் மிக நன்றாக பழகுகிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார். ஒரு சிறந்த ராணுவ ஜெனரல் இருக்கிறார். உங்களிடம் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். நான் மிகவும் மதிக்கும் இரண்டு பேர். பாகிஸ்தான் மிகவும சிறப்பாக செயல்படுகின்றது என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

மேலும் இது தொடர்பாக அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை அமைச்சர் அலிசன் ஹூக்கர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாகிஸ்தானின் வெளியுறவு துறை செயலாளர் அம்னா பலோச்சுடன் பேசினேன். தலிபான்களுடனான மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தலிபான்கள் தாக்குதல்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* பிரதமரை சாடிய காங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘ஆப்கானிஸ்தானுடனான போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளிப்பது இந்தியாவுக்கு மற்றொரு பின்னடைவாகும். அமெரிக்கா சுயமாக அறிவிக்கப்பட்ட விஸ்வகுரு என்ற நிலையை அடைந்துள்ளது. 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னணியாக இருந்து ஆத்திரமூட்டும் கருத்துக்களை வழங்கிய நபரை பாராட்டுவதற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தனது வழியில் இருந்து விலகிச் சென்றுள்ளார். அமெரிக்கா உடனான நமது பொருளாதார ராஜதந்திரம் மோசமாக தோல்வியடைந்துள்ளது. பிரதமர் மோடி திடீரென ஒருதலைப்பட்சமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு சரணடைந்தன் மூலம் இது வெளிப்படுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: