அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர்; துபாயில் கள நிலவரம் என்ன..? நேரடி ரிப்போர்ட்

சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது நடத்திய கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் படைகளை வளைகுடா நாடுகளுக்கு எதிராகத் திருப்பியுள்ளது. இதன் விளைவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரமான துபாய் மீது வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நிழல் யுத்தம், தற்போது நேரடி போராக மாறியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் சொத்துக்கள் மற்றும் தளங்களைக் குறிவைத்து இந்த தாக்குதலைத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து நமது துபாய் நிருபர் அளித்த தகவல்கள் பின்வருமாறு: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகத்தில் ஒன்று தான் துபாய். இங்கு தற்போது ஈரான் நடத்திய தாக்குதல் இதுவரை வரலாறு காணாதவை. அவர்கள் ஏவிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. அப்படி அழிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மூலமாகத்தான் சில இடங்களில் தீ பரவியது. அதேபோல், அல் – நகுதா போன்ற குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இருப்பினும், பெரியளவிலான பாதிப்புகள் இல்லை. துபாயின் அடையாளமாகத் திகழும் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ‘பேர்மாண்ட் தி பாம்’ ஹோட்டல் மீது டிரோன்கள் மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்கு அருகிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

அதேபோல், ஜெபல் அலி, ரஷித், போன்ற துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர். மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமைடந்துள்ளன. குறிப்பாக, சயீத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் துபாய் வாசிகளுக்கு புதுவிதமான ஒன்று என்பதால் அனைவரும் பயத்துடன் வீடுகளில் முடங்கி உள்ளனர். அரசு இங்கு மக்களுக்கு குறுச்செய்திகள் மூலம் தகவல்களை தெரிவிக்கின்றன. பணிக்கு செல்வோர் வீடுகளிலேயே இருந்து தங்களது அலுவல் பணிகளை செய்கின்றனர். இருப்பினும், ஒரு சில பகுதிகளில் ரமலான் மாதத்தையொட்டி பள்ளி வாசல் செல்வது, வெளியே செல்வது என உள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம் தேரா பகுதி. அங்கும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடக்கவில்லை. தாக்குதல் இன்னும் சில நாட்களில் நின்றுவிடும் என நினைக்கின்றனர்.

மக்கா – மதீனாவில் சிக்கிய 50 ஆயிரம் இந்தியர்கள்
துபாயில் இருந்து சவுதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 50 ஆயிரம் இந்தியர்கள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர் அவர்கள் திரும்பி துபாய் வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் பதற்றம் நிலவுவதால், வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

புர்ஜ் கலிஃபா மீது தாக்குதல் இல்லை
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகளும், சமூகவலைதளத்தில் வீடியோக்களும் வேகமாக பரவின. ஆனால், புர்ஜ் கலிஃபா மீது டிரோன் தாக்குதலுக்கு முயன்றபோது அது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதே உண்மை. இதில் அதன் உதிரி பாகங்கள் புர்ஜ் கலிஃபா அருகாமையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்று விழுந்து சிறிய அளவிலான தீ பற்றியது. அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் புர்ஜ் கலிஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரப்பிவிட்டுள்ளனர்.

ஜெபல் அலி துறைமுகத்தில் தீ
ஐக்கிய அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை விவரம்: நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளோம். இந்த தாக்குதல்களில் ஏவுகணைகள் அழிக்கப்பட்ட போது விழுந்த சிதைவு பொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களை தொடவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

துபாய் மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. Emirates மற்றும் FlyDubai நிறுவனங்கள் இன்று பிற்பகல் வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. குறிப்பாக, ஜெபல் அலி துறைமுகத்தில் ஏவுகணை சிதைவுகள் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு செயல்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் இறையான்மையை பாதுகாக்க அனைத்து உரிமைகளும் எங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: