சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு, மதுபானங்கள் விற்பனையில் கூடுதல் வருவாய் திரட்டும் வகையில் புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. இதனடிப்படையில் மதுபானங்கள் தனியார் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பாஜ ஒன்றிய அரசு, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகள் மீது சோதனைகள், வழக்குகள் பதிவு, முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும் டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், “டெல்லி அரசு மதுபானக் கொள்கை வகுத்ததில் சதியோ, குற்றவியல் நோக்கமோ இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை” என கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி பொதுச் செயலாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 21 பேரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அரசியலமைப்பு அரசு அதிகாரம் பெற்ற அமைப்புகளை, பாஜவினர் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக தரம் தாழ்த்தி வருவதாக நாடு முழுவதும் எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது. பாஜவின் தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியலை தோலுரித்து காட்டியுள்ளதுடன், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதன் வன்மத் தாக்குதல் நடத்தி வரும் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ள டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
சட்டப் போராட்டத்தின் மூலம் பாஜவின் பழிவாங்கும் அரசியலை படுதோல்வி காணச் செய்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், விடுதலை பெற்றுள்ள அதன் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
