பிரதமர் மோடி, 2014ல் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்தித்த போது, ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக மீனவர்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். அதில், இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காப்போம். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும். கிசான் கிரெடிட் கார்டு பலன்கள் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்படும். மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன கருவிகள் அளிக்கப்படும்.
மாநில மொழியில் அறிவுரைகள் கூறும் கருவிகள் இஸ்ரோ உதவியுடன் அளிக்கப்படும் என்றெல்லாம் கூறினார். ஆனால் 12 வருடமாகியும், இதில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 2024ல் தமிழகத்தில் மட்டும் 560 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 542 பேர் விடுவிக்கப்பட்டனர். 2025ல் 360 பேர் கைதானதார்கள். 2026ல் கடந்த 2 மாதத்தில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2014 முதல் நேற்று முன்தினம் வரை 3,724 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
இதில் 3,648 ேபர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 76 பேர் சிறையில் உள்ளனர். மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள 262 விசை படகுகள் இலங்கையில் சேதமடைந்து கொண்டிருக்கிறது. மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்கவும், கைதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல முறை போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இதையெல்லாம் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கும் மன நிலையில் உள்ளனர்.
இதுபற்றி நாகை மீனவர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மட்டுமல்ல, கண்மூடித்தனமாக தாக்குவதும் நடக்கிறது. இலங்கையில் உள்ள 262 விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பம் வாழ்வாதாரம் இழந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீனவ சமுதாயம் பாஜ அணிக்கு எதிராகவே இருக்கும் என்றனர்.
