சொன்னாரு: தமிழகத்தின் தலைநகரான சென்னையில், ஏழை எளிய மக்களும் உலகத்தரம் வாய்ந்த உயர்சிறப்பு சிகிச்சைகளை இலவசமாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021 ஜூன் 3 அன்று கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
செஞ்சாரு: கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில், 5.53 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் மொத்தம் 7 தளங்களுடன், 1000 படுக்கைகள் வசதியுடன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான 2022 மார்ச் 21 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கலை நாட்டினார். மொத்தம் ரூ.230-240 கோடி செலவில் நடந்த கட்டுமான பணி வெறும் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு 146 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிடப்பட்டது. இந்த மருத்துவமனையை கடந்த 2023 ஜூன் 15 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர சிகிச்சைக்கான சிறப்புப் படுக்கைகள் உள்ளன. இது தவிர, இதயம், நரம்பியல், சிறுநீரகம், புற்றுநோய் சிகிச்சை, குடல்-இரைப்பை பிரிவு எனப் பல உயர்சிறப்புத் துறைகள் இங்கு செயல்படுகின்றன.
இது ஒரு பசுமை கட்டிட தரச்சான்றிதழ் பெற்ற கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 முதல் 1,500 பேர் வரை வெளி நோயாளியாக சிகிச்சைக்காக வருகின்றனர். (ஆரம்பத்தில் இது 800-ஆக இருந்தது, தற்போது அதிகரித்துள்ளது). அதேபோல், தினசரி சராசரியாக 50 முதல் 100 புதிய நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.
* சிகிச்சை பெற்றவர்களின் விவரம்
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டு முதல் ஓராண்டு நிறைவில் (ஜூன் 2024 வரை) சிகிச்சை பெற்றவர்களின் விவரம்:
* வெளிநோயாளிகள்: 2,21,434 பேர்.
* உள்நோயாளிகள்: 63,505 பேர்.
* அறுவை சிகிச்சைகள்: சுமார் 5,000க்கும் மேற்பட்ட பெரிய அறுவை சிகிச்சைகள் (டிசம்பர் 2024 வரை) செய்யப்பட்டுள்ளன.
* பரிசோதனைகள்: 7.72 லட்சத்திற்கும் அதிகமான ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் 17,000-க்கும் மேற்பட்ட எக்கோ (ECHO) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
* முதல்வர் காப்பீட்டு திட்டம்
* இதுஒரு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்பதால், பொதுவாக பெரியவர்களுக்கான சிக்கலான சிகிச்சைகளே இங்கு அதிகம் வழங்கப்படுகின்றன.
* இதய நோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்காக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் வருகின்றனர்.
* புற்றுநோய், விபத்து கால அவசர சிகிச்சைகளுக்காக 30-50 வயதுடையவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
* இந்த மருத்துவமனையில் வழங்கப்படும் பெரும்பாலான உயர்தர சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருவதால், அதற்கான சிகிச்சைச் செலவுகளைக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. இது மருத்துவமனையின் கூடுதல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
