சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.8,032.35 கோடி செலவிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரையில் ரூ.1.45 கோடி செலவில் அறிவுரை குழும அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.137.04 கோடி செலவில் “குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைபின்னல் அமைப்பு மற்றும் டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு அமைப்பு, முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவி திட்டத்தில் நிவாரண உதவிகளை விரைவாக வழங்கிட புதிய இணையதளம் தொடங்கி வைத்தார்.
மேலும், வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அமைக்கும் திட்டத்திற்காக ரூ.7.24 கோடி செலவில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம், 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணிணிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். இதுபோல, தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.8032.35 கோடி செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.1,960.37 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.4813.92 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 13 சாலைகள் மற்றும் ஒரு பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.897 கோடியே 63 லட்சம் செலவில் 26 கி.மீ, நீளத்திற்கு (வாலாஜாபாத் புறவழிச்சாலை 6.846 கி.மீ உள்பட) நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட மற்றும் 13.79 கி.மீ நீளத்திற்கு 10 மீ அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை;
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.719 கோடியே 10 லட்சம் செலவில் புன்னப்பாக்கம் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை (பிரிவு-2) 12.8 கி.மீ நீளத்திற்கு இருபுறமும் இருவழிச் சேவை சாலைகளுடன் கடினப் புருவத்துடன் அமைக்கப்பட்ட ஆறு வழித்தட சென்னை எல்லை சாலை; காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.674.19 கோடியில் 41.779 கி.மீ, நீள (அரக்கோணம் புறவழிச்சாலை 16.915 கி.மீ உள்பட) 10 மீ அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் – அரக்கோணம் – திருத்தணி சாலை என மொத்தம் ரூ.4,813.92 கோடியில் அமைக்கப்பட்ட13 சாலைகள் மற்றும் ஒரு பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
