நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னிலை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாராட்டினார். தமிழகத்தில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 25ம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். புதுச்சேரி சென்ற தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதை தொடர்ந்து சென்னையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழுவினர் 26ம் தேதி மதியம் 12 மணிக்கு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், சென்னை கமிஷனர் அருண், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (அனைத்து மாவட்ட கலெக்டர்கள்), அமலாக்க அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள், ஐஜிகள், டிஐஜிகளுடன் ஆலோசனை கூட்டம் மாலை 6 மணி வரை நடந்தது.

நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட 24 மத்திய, மாநில அரசில் பணியாற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின் நேற்று மதியம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் சுமார் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் 44,065 கிராமப்புறங்களிலும், நகர்புறங்களில் 30,967 அமைக்கப்பட்டுள்ளன.

எந்தச் சாவடியிலும் 1,500 வாக்காளர்களை மீறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலின்போது அதிகாரிகள் அச்சமின்றிச் செயல்படலாம். வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் நடந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.), இந்தியாவுக்கே மாடலாகவும் வெற்றிகரமாகவும் அமைந்துள்ளது.

தகுதியுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதோடு மற்ற பெயர்களை நீக்கும் பணி, தமிழகத்தில் மிக நன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தாலும், சட்டப்படி தகுதியுள்ள யாராவது விடப்பட்டு இருந்தால் அவர்கள் மீண்டும் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளுக்கு 10 நாள் முன்புவரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்க முடியும்.

இறந்த வாக்காளர்கள், இடம் மாறிச் சென்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் அதே காலகட்டத்தில் வாய்ப்புள்ளது. வேறு வாக்குச்சாவடி அல்லது வேறு தொகுதிக்கு இடம் மாறிச் சென்றிருந்தால்கூட புதிய இடத்திற்கான பட்டியலுக்கு மாறிக்கொள்ளலாம். தமிழகத்தில் நடந்துள்ள எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக தமிழகத்தின் அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் எனது பாராட்டுகள். ஏனென்றால் 5.67 கோடி வாக்காளர்களில் இதுவரை 216 மேல்முறையீடுகளே மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வந்துள்ளன.

இங்கு அரசியல் கட்சியினருடன் நான் பேசியபோது, அனைவருமே ஒரே கட்ட தேர்தலைத்தான் கேட்டனர். அதை குறித்துக்கொண்டோம். என்றாலும், இங்குள்ள மற்ற காரியங்களையும் கருதி அதில் ஒரு முடிவெடுத்து, தமிழகத்தில் எத்தனை கட்ட தேர்தல் என்பதை தேர்தல் தேதியை அறிவிக்கும் நேரத்தில் தெரிவிப்போம். தமிழகத்தில் பாலின விகிதாச்சாரம் சிறப்பாக உள்ளது. ஆண்களைவிட பெண் வாக்காளர்கள்தான் இங்கு அதிகம். இதற்கு தமிழகம் பெருமையடைய வேண்டும்.

தமிழக இளைஞர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் உள்ளது. பீகாரில் கடந்த 10 ஆண்டுகளாக தவறுகள் இல்லாத தேர்தல் நடந்து வருகிறது. பீகாரை விட சிறப்பான தேர்தலை தமிழகத்தில் நடத்துவோம் என்று இங்குள்ள அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

* தமிழ்நாடு ஜனநாயக நடைமுறைகளை கொண்ட மாநிலம்
தமிழ்நாடு தொன்மையான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட மாநிலம். அண்மையில் 72 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதில் பல நாடுகளின் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, கி.பி. 10ம் நூற்றாண்டிலிருந்து நடைமுறையில் இருந்த தமிழ்நாட்டின் ‘குடவோலை முறை’ உலகிற்கு எடுத்துக்கூறப்பட்டது. அந்த விளக்கத்திற்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் தொன்மையான ஜனநாயக மரபை பாராட்டியது.

Related Stories: