எனது பிறந்த நாளில் ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பிரசார பணியை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எனது பிறந்த நாளில் ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பிரசார பணியை அமைதியாக மேற்கொள்ள திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனக்கு மார்ச் 1ம் தேதி 73வது பிறந்தநாள். எனது பிறந்த நாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களை கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.

பிறந்த நாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளை செய்வது, கழக கொடிகளைப் புதுப்பிப்பது – புதிய கொடிகளை ஏற்றி வைப்பது – கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது அண்ணா, கலைஞர் பெயர்களில் உள்ள படிப்பகங்களுக்கு பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது – மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக ரத்த தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை.

இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன். இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே, என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ‘‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் ‘‘என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க தொடங்கிவிட்டது. எனவே, 7வது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும். அதுவே நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து. ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர். இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்.

Related Stories: