சேலம் கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி வளாகம் திறப்பு; தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் கொண்டு வர முயற்சி எடுப்பேன்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி

சேலம்: தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் கொண்டு வர முயற்சிகள் எடுப்பேன் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகரில் உள்ள ஒன்றிய அரசின் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.30 கோடியில் கட்டப்பட்ட புதிய கல்வி வளாகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய கல்வி வளாகத்தை திறந்து வைத்தார். ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் ராஜேந்திரன், எம்பிக்கள்செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ, ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் பீனா பங்கேற்றனர். விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த மண்ணில் ஜவுளித்துறையை காப்பாற்ற இது சிறந்த கல்வி வளாகமாக விளங்கும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலத்திற்கு பெருமை சேர்த்து தந்த இந்த மண்ணின் மைந்தரான இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலச்சாரியருக்கு நாடாளுமன்றத்தில் சிலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இந்த சிலை திறக்கப்பட்டிருப்பது, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பெருமை சேர்க்கிறது. நெசவு தொழில் நசிவடையாமல் இருக்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அமெரிக்கா இந்திய இறக்குமதிக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தியதும், ஏற்கனவே இருந்த 18 சதவீத வரியோடு சேர்த்து 68 சதவீதம் வரி செலுத்தும் நிலை வந்தது. தமிழ்நாட்டில் ஜவுளி தொழில் இருண்டதாக மாறிவிடுமோ? என்றார்கள்.

அப்போது என்னிடம் பேசியவர்களிடம், இதுவரை இல்லாத வகையில் பிரகாசமான ஒரு வர்த்தகத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி தருவார் எனக் கூறினேன். அதனை நான் ஆறுதல் சொல்வதற்காக கூறியதாக நினைத்தார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தியது. இதன்மூலம் நமக்கு போட்டியான வங்கதேசம், சீனா நாடுகளுடன் எளிதாக போட்டியிடும் புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு திட்டங்களை கொண்டு வர என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். இந்த கல்லூரி வளாகத்தை முழுமையாக நெசவாளர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் தேவை ஏற்படின் ரூ.100 கோடியில் புதிய கட்டிடங்களை ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் கட்டித்தருவார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: