சென்னை: பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் மோதல் நடந்து வருகிறது. கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்து தனது முகவரிக்கு கடிதம் அனுப்புமாறு உத்தரவிடக் கோரி, கட்சி நிறுவனர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், ராமதாசின் வழக்கறிஞர் அருள் நேற்று தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
