அண்ணணை தாக்கிய தம்பி கைது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில்

பள்ளிகொண்டா, பிப்.28: பள்ளிகொண்டா அடுத்த இறைவன் காடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன்கள் திருவேங்கடம் (50), மணிகண்டன் (43). வெங்கடேசனுக்கு சொந்தமான நிலத்தை இருமகன்களுக்கும். தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளார். அதன்பிறகு இருவரும் ஒரே பம்ப் செட், கிணற்றின் மூலமாக பயிர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் என மாறி மாறி நீர் பாய்ச்சி விவசாயம் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி மணிகண்டன் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில், திருவேங்கடம் மனைவி சித்ரா நிலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் நான் தண்ணீர் திருப்ப வேண்டிய நாளில் நீ ஏன் தண்ணீர் திருப்பிக் கொண்டு உள்ளாய் என சித்ராவிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றி மணிகண்டன் சித்ராவை கைகளால் தாக்கி உள்ளார். சித்ராவின் கணவர் திருவேங்கடம் இது சம்பந்தமாக தம்பியை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அண்ணன் என்றும் பாராமல் கையில் வைத்திருந்த தடியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திருவேங்கடம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Related Stories: