கே.வி.குப்பம்,பிப்.28: கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டு பகுதியில் பொன்னியம்மன் திருவிழாவினை முன்னிட்டு நேற்று மாடு விடும் விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடி வாசலில் ஒன்றன் பின் ஒன்றாக நிற்கவைக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய் துறையினர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற பின் காளைகள் ஓட அனுமதிக்கப்பட்டது. இதனிடையே கால்நடை மருத்துவர்கள் மூலம் கொண்டுவந்திருந்த 184 காளைகளில் ஒவ்வொரு காளைகளையும் பரிசோதனை செய்தனர். இதில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் எஞ்சியுள்ள காளைகளை ஒவ்வொன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. ஓடுபாதையின் நடுவே நின்று கொண்டு இளைஞர்கள் சிலரை காளைகள் முட்டி மோதியது. அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இவர்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த சுகாதார துறையினர் மூலம் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. சிறப்பாக ஓடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும், குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.55 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.35 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சீலிங் பேன், டேபிள் பேன், குக்கர், காஸ் அடுப்பு உட்பட 81 பரிசுகள் வழங்கப்பட்டன. தீயணைப்பு துறையினர், மின்சார துறையினர், பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். குடியாத்தம், காட்பாடி சப் டிவிஷன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
