*லாரிக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
பரமக்குடி : பரமக்குடி அருகே சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது லாரி மோதியதில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். அஜாக்கிரதையாக ஓட்டியதால் லாரி உரிமையாளருக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் நேற்று காலை 30 மாணவ,மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு திரும்பி கொண்டு இருந்தது. மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு செல்வதற்காக வாகனம் சாலையை கடக்க முயன்ற போது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த டிப்பர் லாரி பள்ளி வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.
இதில் பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. வாகனத்திற்குள் இருந்த பள்ளி குழந்தைகள் 30 பேர் உடனே மீட்கப்பட்டனர். இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தலை,கை, கால் பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் சென்று சிகிச்சை பெற்ற மாணவ,மாணவிகளிடம் நலம் விசாரித்தார். இதுபோல் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் மாணவர்களிடம் நலம் விசாரித்தனர்.
இந்த விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்து பற்றி பரமக்குடி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் விசாரணை நடத்தினார். இதில் அதிகமான பாரங்களுடன், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதால், வாகன உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தார்.
