*நகராட்சி கண்டுகொள்ளாததால் மாயமாகின்றன
திருச்செந்தூர் : திருச்செந்தூர் பகுதியில் நல்ல தண்ணீர் கிணறுகளை பராமரித்து பாதுகாக்காததால் நீராதாரம் அழிந்து வருவதுடன் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தென்காலின் கடைசிக் குளங்களாக திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மற்றும் எல்லப்பநாயக்கன் குளம் ஆகியன உள்ளன.
இந்தக் குளங்களே திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, கால்நடைகளின் தாகத்தையும் தீர்த்து வைப்பது மட்டுமின்றி விவசாய நிலங்களின் நீராதாரமுமாக உள்ளது.
மேலும் முந்தைய காலத்தில் இருந்தே திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், பெரிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாத நேரத்தில் மாட்டுவண்டிகளிலும் வரும் பக்தர்களும் இங்குள்ள குளங்களிலும், குளத்தின் நேர்முகமாக உள்ள நல்ல தண்ணீர் கிணறுகளிலும் நீராடி விட்டு கோயிலில் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். இதனால் மழைக்காலங்களிலும், கோடை காலங்களிலும் இந்த கிணறுகளே குடிப்பதற்கும், குளிப்பதற்குமான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்கிறது.
ஆனால் கிணறுகளை முறையாக பராமரிப்பு செய்யாததால் அவை காலப்போக்கில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மற்றும் தெப்பக்குளத்தின் கரையோரங்களின் எதிரே வரிசையாக நல்ல தண்ணீர் கிணறுகள் உள்ளன. இவற்றை நகராட்சி மற்றும் சமுதாய அமைப்புகள் பராமரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிணறுகளை முறையாக பராமரிக்காததால் அவை தூர்ந்து போகின. மேலும் ஒரு சில கிணறுகள் மண்ணால் மூடப்பட்டு மாயமாகியும் உள்ளன. இதனால் நல்ல தண்ணீர் கிணறுகளில் சிலவற்றை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடியும் மாறிப் போகின. குறிப்பாக ஆவுடையார்குளத்தின் வடக்கு கரையோரம் இருந்த 10 கிணறுகளில் 2 மாயமாகி தற்போது 8 கிணறுகளாகி அதில் 6 மட்டும் பயன்படும் நிலையில் உள்ளது.
இதில் நகராட்சி பராமரிக்கும் ஆவுடையார்குளம் தொடங்கும் இடத்திற்கு எதிரே உள்ள கிணறுகள் முழுக்க முழுக்க பராமரிப்பின்றி மது அருந்தும் பாராகவும் மாறியுள்ளது. நல்ல தண்ணீர் கிணறுகளில் மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் வீசப்பட்டு சுகாதாரக் கேடாகவும் மாறி உள்ளது. இதனால் பராமரிப்பில்லாதாலும், பயத்தினாலும் கிணறுகளுக்கு குளிக்க வருபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து திமுக நிர்வாகி மணல்மேடு சுரேஷ் கூறுகையில், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள ஆவுடையார்குளம் மற்றும் அதனருகில் உள்ள கிணறுகளை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும்.
திமுக சார்பில் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக கிணறுகளை தூர்வாரி இரும்பு சங்கிலியுடன் வாளி பொருத்தி வைத்தோம்.ஆனால் அதனை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
தகவல் உரிமை பெறும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான கிணறுகளை மட்டும் நகராட்சி பொறியியல் பிரிவு மூலம் பராமரிப்பு மேற்கொள்ளப்படும் என பதிலளித்து உள்ளது. அதில் எத்தனை கிணறுகள் நகராட்சிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படவில்லை.
பொதுமக்கள் மட்டுமல்லாது பக்தர்கள் குளிப்பதற்கு பேருதவியாக இருக்கும் கிணறுகளை பாதுகாப்பது நிலத்தடி நீரை பாதுகாக்கும் செயலாகும். கிணற்றில் இருந்து வெளியேறும் நீர் நிலத்திற்கு சென்று கரையோரம் நிற்கும் மரங்களுக்கும் உயிரோட்டம் செய்கிறதே தவிர வீணாக்கப்படுவதில்லை என்பதை நகராட்சி உணர வேண்டும். கிணறுகளை உருவாக்குவது கடினம்.அதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதனை பயன்படுத்தும் பொதுமக்களும் உணர வேண்டும், என்றார்.
நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா?
திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தின் கரையோரங்களில் இருக்கும் கிணறுகள் முறையாக பராமரிக்கப்படாமல் அவை முதலில் பயன்படாததாக மாறுகிறது. அதன்பிறகு தூர்ந்து போகி மெல்ல மெல்ல குப்பைகள் போடப்படும் தொட்டியாக மாறி நாளடைவில் உடைந்து உள்ளே விழுந்து மூடப்படும் நிலை உருவாக்கப்படுகிறது.
அதனை நகராட்சியிடமே பயன்படாத கிணறு எனக் கூறி அகற்ற மனு கொடுத்து தனி நபர்கள் கிணறு இருந்த இடமும், தடமும் தெரியாமல் பாதையாக மாற்றி விடுகின்றனர். இயற்கைக்கு எதிரான இந்த நிலையை யார் தான் கண்டுகொள்வார்கள்? என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.
