பவானி நகராட்சியில் ரூ.15.79 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் 50 சதவீதம் நிறைவு

*காவிரி, பவானி ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கை தீவிரம்

பவானி : பவானி நகராட்சியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பவானி மற்றும் காவிரி ஆறுகளில் நேரடியாக கலப்பதை தடுத்து, சுத்திகரித்து வெளியேற்றும் வகையில் ரூ.15.79 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.கடந்த 1978ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ள பவானி 27 வார்டுகளையும், 2.17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டது. 2011 கணக்கெடுப்பின்படி 39 ஆயிரத்து 225 மக்கள் தொகை கொண்டதாகவும், தற்போதைய நிலவரப்படி சுமார் 45 ஆயிரம் பேர் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பவானி மற்றும் காவிரி ஆறுகளுக்கு மத்தியில் இந்நகராட்சி அமைந்துள்ளதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இரு ஆறுகளிலும் நேரடியாக கலக்கிறது. இதனால், ஆற்று நீர் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. பவானி நகராட்சி நிர்வாகம் தினசரி 4.2 மில்லியன் லிட்டர் விநியோகிக்கும் குடிநீரில், 80 சதவீதம் கழிவு நீராக வெளியேறுவது ஆய்வில் கண்டறியப்பட்டது.

நாளொன்றுக்கு 3.36 மில்லியன் லிட்டர் கழிவு நீர் நேரடியாக வெளியேறுவதும், பவானி ஆற்றில் காடையம்பட்டி, திருவள்ளுவர் நகர், பழனிபுரம், ராயல் தியேட்டர் ரோடு, மெக்கான் வீதி, பழைய பஸ் நிலையம் என 23 இடங்களிலும், காவிரி ஆற்றில் புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், மீனவர் தெரு உட்பட 17 இடங்களில் காவிரி ஆற்றிலும் வடிகால் மூலம் சென்று கழிவுநீர் கலப்பதும் தெரியவந்தது.

எனவே, கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நீண்ட காலமாக முயற்சி எடுக்கப்பட்டது. மிகச் சிறிய நகராட்சியான பவானியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் பல்வேறு தடைகள் இருந்த நிலையில், ஸ்வட்ச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தில் விரிவான, பாதுகாப்பான சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவு நீரை சுத்திகரிக்க திட்டமிடப்பட்டது.

கழிவு நீர் ஆற்றில் கலக்கும் இடங்களை கண்டறிந்து தடுத்து, குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று, சுத்திகரிப்பு செய்து, காவிரி ஆற்றில் வெளியேற்றிட ரூ.15.79 கோடியில் செயல்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டது.

பவானி நகராட்சியின் நிலவியல் அமைப்பு ”வி” வடிவத்தில் உள்ளதால், தேவபுரம் மயான வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வல்லுநர் குழு நடத்திய ஆய்வில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரூ.7.61 கோடியில் சுத்திகரிப்பு நிலையம், ரூ.8.18 கோடியில் சேகரிப்பு மையங்கள், குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக, 11.40 கிமீ தொலைவுக்கு குழாய்கள் பதிக்கவும், கழிவுநீர் வெளியேறும் பகுதியில் 140 இடங்களில் கான்கிரீட் சேகரிப்பு குழிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2024 செப்டம்பர் மாதம் இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குழாய்கள் பதித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுத்து, சேகரித்து, குழாய்கள் மூலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்படும் சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து மோட்டார் மூலம் நீரேற்றம் செய்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதேபோன்று, காவிரியில் கலக்கும் கழிவுநீர் நேரடியாக கொண்டு செல்லப்பட்டு சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குழாய் பதிக்கும் பணிகள் 50 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ள நிலையில், பாக்கியுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதுறையில் சங்கமிக்கும் கழிவுநீர்

காவிரி, பவானி ஆறுகளில் கழிவுநீர் கலந்த தண்ணீர் கூடுதுறையில் சங்கமிக்கிறது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக பரிகார தலமாகவும் விளங்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடும் பக்தர்கள் கழிவுநீர் கலந்த தண்ணீரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், நேரடியாக ஆறுகளில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு, கூடுதுறைக்கு செல்லும் பாதுகாப்பான தண்ணீரில் நீராட முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: