*4 பேர் கைது
நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்திற்கு கடத்தி வரப்பட்ட 626 சாராய பாட்டில்கள், ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக மதுபானம் கடத்தப்படுவதாக எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான வாழ்மங்கலம் சோதனை சாவடியில் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மூட்டையில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த தனுஷ்கோடி (40) என்பது தெரியவந்தது.
இவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக கீழ்வேளூரில் விற்பனை செய்வதற்காக சாராயம் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 180 மில்லி லிட்டர் அளவுள்ள 626 சாராய பாட்டில்கள், ஒரு இரண்டு சக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் வேளாங்கண்ணி அருகே தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் வந்த கார், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மேரீஸ்கார் பார்கிங் நின்றது.
போலீசாரை கண்டவுடன் காரில் வந்த இரண்டு பேர் இறங்கி ஓடதொடங்கினார். போலீசார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் தேவ்வணண்டி பகுதியை சேர்ந்த கன்பட்சிங்(29), ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் ஏலானா பகுதியை சேர்ந்த அர்ஜீன்சிங்(31) என்பது தெரியவந்தது.
இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து நாகப்பட்டினம், திருவாரூர், மாயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வேளாங்கண்ணி போலீசார் இரண்டு பேர்மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ், விமல் பாக்கு, கூலீப் என 400 கிலோ எடையுள்ள பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
