ஓடும் பஸ்சில் பெண் பயணியின் பர்சை திருடிய நெல்லை இளம்பெண் கைது: 10 போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு அம்பலம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடமிருந்து ரூ. 12 ஆயிரம் அடங்கிய பர்சை திருடிய நெல்லையைச் சேர்ந்த இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இவர் மீது கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் 10 போலீஸ் நிலையங்களில் பிக்பாக்கெட், திருட்டு வழக்குகள் உள்ளதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே மணற்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். ஆட்டோ டிரைவர். நேற்று அங்குள்ள திருநக்கரை பஸ்நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது பஸ்நிலையத்தில் இருந்து வந்த இளம்பெண் ஆட்டோவில் ஏறினார். எங்கே போகவேண்டும் என்று டிரைவர் மனோஜ்குமார் கேட்டதற்கு நேராக செல்லுங்கள் என்று இளம்பெண் கூறியுள்ளார்.

ஆனால் அவரது நடவடிக்கைகளில் மனோஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆட்டோவில் இருந்த கண்ணாடி வழியாக பார்த்தபோது இளம்பெண் தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு பர்சை எடுத்து அதிலிருந்த பணத்தை எடுத்த பின்னர் அந்த பர்சை சீட்டுக்கு அடியில் போட்டுள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர் ஆட்டோவை நிறுத்துமாறு கூறிய இளம்பெண், கட்டணத்தை கொடுத்துவிட்டு அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார். அதன் பிறகு மனோஜ்குமார் ஆட்டோவுக்குள் பார்த்தபோது சீட்டுக்கு அடியில் காலி பர்ஸ் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை பிடித்து வைத்து திருநக்கரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் அவர் பஸ்சிலிருந்து ஒரு பெண் பயணியிடமிருந்து பர்சை திருடியது தெரியவந்தது.

விசாரணையில் இளம்பெண் திருநெல்வேலியை சேர்ந்த ஜோதி (33), என்றும் கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் இவர் மீது 10 போலீஸ் நிலையங்களில் பிக்பாக்கெட் மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன என்றும் தெரியவந்தது. இதனால் இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே பஸ்சில் வைத்து 12 ஆயிரம் ரூபாய் அடங்கிய தன்னுடைய பர்சை காணவில்லை என்று கூறி ரமணி என்ற பெண் புகார் கொடுப்பதற்காக திருநக்கரை போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் போலீசார் பர்சை ஒப்படைத்தனர். மேலும் திருட்டு ராணியை கைது செய்ய உதவிய ஆட்டோ டிரைவர் மனோஜ்குமாரை பாராட்டி போலீசார் அவருக்கு பரிசு வழங்கினர்.

Related Stories: