புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலையடுத்து, பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இது நடைபெற்று 3 மாதங்கள் நிறைவடையாத நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு குறித்து ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, செங்கோட்டை அருகிலுள்ள முக்கியமான பகுதிகள், நாட்டில் உள்ள முக்கிய மத வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து டெல்லியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது, வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எளிதில் தாக்கப்படக்கூடிய இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள், மோப்ப நாய் படைகள் மற்றும் விரைவு அதிரடி படைகள் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகியவை இணைந்து டெல்லி மற்றும் உபியில் உள்ள முக்கிய இந்து கோயில்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. பாகிஸ்தானின் தீவிரவாத மறைவிடங்களை குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்றும் இடைமறிக்கப்பட்ட தகவல் தொடர்புகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த தீவிரவாதிகளில் சிலர் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் கூட்டாளிகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்தன.
