கவுஹாத்தி: அசாமின் கவுஹாத்தியில் காவல்துறையின் 10வது பட்டாலியனின் புதிய வளாகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித் ஷா, ‘‘ஊடுருவல்காரர்கள் அகற்றப்படுவார்கள் என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் அவ்வாறு செய்ய முடியாது.ஏனெனில் சட்டவிரோத குடியேறிகள் அதன் வாக்கு வங்கியாகும்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது மட்டும் போதாது. அவர்களை இந்தியாவில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப்பணியை செய்து வருகின்றது. இதன் மூலமாக ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். ஆனால் ராகுல்காந்தி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். ஊடுருவல்காரர்களை அகற்றுவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்தால் அதை அதன் அறிக்கையில் குறிப்பிடவேண்டும் என்று ராகுல்காந்திக்கு நான் சவால் விடுகிறேன்” என்றார்.
