திருமலை: தெலங்கானா மாநிலம் காமாரெட்டியை சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ வெங்கடரமணரெட்டி. இவர் நிலஅபகரிப்பு செய்வதாக காங்கிரஸ் தலைவர் ஷபீர்அலி குற்றம்சாட்டி வந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக எம்எல்ஏ வெங்கடரமண ரெட்டி, `தைரியம் இருந்தால் நேரடியாக விவாதத்திற்கு வாருங்கள்’ என சவால் விடுத்தார்.
இந்நிலையில் நேற்று பாஜக எம்எல்ஏ அலுவலகத்திற்கு காங்கிரஸ் தலைவர் கிரிரெட்டி மகேந்திர ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அவர்கள் மாடியில் உள்ள அறையை பார்த்து, `எம்எல்ஏ கீழே இறங்கி வா’ என கோஷமிட்டனர். மேலும் கார் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் கிரிரெட்டி மகேந்திரரெட்டியை கைது செய்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர்களின் காரை பாஜக தொண்டர்கள் சேதப்படுத்தினர். மகேந்திர ரெட்டியின் காரை பாஜக தொண்டர்கள் தாக்கி கவிழ்த்து தீ வைக்க முயன்றனர். இரு கட்சித்தொண்டர்களையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
