தானே: கடந்த 2014ம் ஆண்டு சோனாலே கிராமத்தில் நடந்த காங்கிரஸ் பேரணியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் மகாத்மா காந்தி கொலை பின்னணியில் ஆர்எஸ்எஸ் பங்கு இருப்பதாக ராகுல்காந்தி கூறியதாகவும், ராகுலின் இந்த தவறான கருத்து ஆர்எஸ்எஸ் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ஆர்எஸ்எஸ் ஆர்வலர் குந்தே அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. வழக்கு விசாரணைக்காக ராகுல்காந்தி நேற்று தானே வந்திருந்தார். ராகுல்காந்திக்கு இந்த வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் வழங்கியிருந்த முன்னாள் அமைச்சர் சிவராஜ் பாட்டில் இறந்ததை அடுத்து ராகுல் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதனையடுத்து ராகுலுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் புதிய ஜாமீன் உத்தரவாதம் அளிப்பவராக ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.
* பாஜவினர் கருப்புக் கொடி
டெல்லியில் ஏஐ உச்சி மாநாட்டு வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்ததோடு ராகுல்காந்தியின் உத்தரவின்பேரில் தான் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தானே வந்த ராகுல்காந்திக்கு பாஜ தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
