திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்த வங்கதேசத்தை சேர்ந்தவர்களை 3 மாதங்களில்  சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும்: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்ததாக தொடரப்பட்ட 28 வங்கதேசத்தினரை மூன்று மாதங்களில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் கம்பெனிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பல்லடம் போலீசார், பனியன் கம்பெனிகளில் சோதனை நடத்தினர்.

அதில், முகமது சலீம், முகமது ஆஷிக், முகமது ஆரீப் அலி உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2025 ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சட்டரீதியான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் வங்க தேசத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாயும் அபராதம் விதித்து 2025 ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, 28 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. 28 பேர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஸின்னே ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 28 பேரும் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பதால், ஏற்கனவே அனுபவித்த தண்டனையே போதுமானது. எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.விடுதலையான 28 பேரையும் மூன்று மாதங்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: