திருச்சி: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதி வேட்பாளர்களை சீமான் நேற்று அறிவித்தார். அதன்படி காரைக்குடியில் அவர் போட்டியிடுகிறார். திருச்சி அருகே ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ நேற்று நடைபெற்றது. மாநாட்டில் சீமான் பேசுகையில்,‘‘ எங்களைப் பெற்றவர்கள், எங்கள் உடன்பிறந்தவர்கள் எங்களைக் கைவிட மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலே நிற்கிறோம். மொழி சிதைந்து அழிந்தால், அந்த இனம் அடையாளம் தெரியாமல் அழிந்துபோகும்.
ஒரு நாட்டை அழிக்க வேண்டுமா? முதலில் அதற்கு யானைப்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை தேவையில்லை. ஒரு உயிரும் போக வேண்டியதில்லை, ஒரு துளி ரத்தம் பூமியிலே சிந்த வேண்டியதில்லை. முதலில் அவன் மொழியை அழிக்க வேண்டும். மொழியை அழித்தால் அவன் கலை, இலக்கியம், பண்பாடு அழிந்துவிடும், அவன் அடையாளம் அழிந்துவிடும், அந்த இனம் அழிந்துவிடும். யாரும் தமிழில் பெயர் வைப்பதில்லை, தமிழில் பேசுவதில்லை.
திரும்ப திரும்ப சொல்கிறேன், இது ரசிகர் கூட்டமல்ல, லட்சியக் கூட்டம் என்று சொல்வதற்கு காரணமும் அதுதான். இத்திரை கவர்ச்சியா? இன எழுச்சியா? பணமா? தமிழன் என்கிற மானமிக்க இனமா? இதுதான் இந்த களத்தில். ஆங்கிலம் ஒரு மொழி, அது எப்படி அறிவாகும்?,’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அதன்படி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சீமான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.
