சென்னை: தேர்தல் நேரம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு 30 சதவீதத்திற்கு மேல் கூடுதல் விற்பனை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் மது விற்பனை, கடைகளில் மதுபானங்களின் இருப்பு ஆகியவற்றை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, (மே மாதம் வரை) மது விற்பனை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால், அது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக சட்டவிரோதமாக மொத்தமாக வாங்கப்பட்டதாக கருதப்படும். இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் உடனடியாக விசாரணை நடத்துவர். அதேபோல், எந்தவொரு சில்லரை விற்பனை கடையிலும் கடந்த ஆண்டை விட 50 சதவீதத்திற்கு மேல் மதுபான இருப்பு இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 700 கடைகள் சென்சிட்டிவ் கடைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பார்களில் மது விற்பனை செய்ய அனுமதி இல்லை என்றும், முறைகேடாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.
இது ஒருபுறம் இருக்க பார்களில் மது விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். பார்களில் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், மதுவுக்கு தனியாகவும், உணவு பொருட்களுக்கு தனியாகவும் கியூஆர் குறியீடு வைத்து விற்பனை நடைபெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்
இதுகுறித்து டாஸ்மாக பணியாளர்களிடம் கேட்கும் போது, “வெளிப்படைத்தன்மைக்காகத் தான் டிஜிட்டல் கட்டண முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனலைன் கட்டணங்கள் மூலம், எம்ஆர்பியை விட அதிகமாக வசூலிக்க முடியாது. இருப்பினும், சில கடைகள் அதிகாரிகளின் உதவியுடன் பார் உரிமையாளர்களுக்கு மது பாட்டில்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது, இது விதிகளுக்கு எதிரானது. அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிந்தும் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்” என்றனர்
