மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்கை சரிபார்க்கும் கருவிகள் ஒதுக்கீடு: இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

 

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாங்கள் பதிவு செய்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் சமவாய்ப்புக்குட்படுத்துதல் மூலம் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு முதற்கட்ட ஒதுக்கீடு நிறைவடைந்தது. அதன் பட்டியல்கள் அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டன. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15ம் தேதி அறிவித்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு கட்ட ஒதுக்கீடு சமவாய்ப்புக்குட்படுத்துதல் மூலம் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. முதற்கட்டமாக மாவட்ட அளவிலான கிடங்குகளிலிருந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சமவாய்ப்புக்குட்பட்டு ஒதுக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டமாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவை தொகுதி அளவிலிருந்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு சமவாய்ப்புக்குட்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், முதற்கட்ட சரிபார்ப்பு முடிந்த இயந்திரங்களுக்கான முதற்கட்ட ஒதுக்கீட்டை முடிக்க வேண்டும். இதன்படி, 2026 ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பொதுத்தேர்தல்களுக்கும், கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்குமான முதற்கட்ட ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலம் இந்த முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாங்கள் பதிவு செய்த வாக்கை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள், அந்தந்த மாவட்ட தலைமையகங்களில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவுசெய்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த சட்டப்பேரவை தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்களின் பட்டியல்கள் அனைத்து போட்டியிடும் வேட்பாளர்களுடனும் பகிரப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: