தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை ஈடுபடுத்த திட்டம்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது மற்றும் எந்தெந்த பகுதியில் நிறுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வருகிற 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். இதற்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல், பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது, மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடி மையம் வருவது உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் முதல்கட்டமாக 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 250 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்னும் சில தினங்களில் படிப்படியாக வர உள்ளனர். ஒரு கம்பெனியில் 80 முதல் 90 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி 300 கம்பெனியில் உள்ள சுமார் 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பறக்கும் படையினருடன் துணை ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஒரு தொகுதிக்கு ஒரு கம்பெனி என்ற அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில், சிஆர்பிஎப் ஒருங்கிணைப்பு அதிகாரி, தமிழ்நாடு காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்ட தேர்தல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட உள்ள சுமார் 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை எங்கெங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகளை விரைவில் கண்டறிந்து, அந்த இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க வசதியாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், அந்த பகுதிகளில் அதிகளவில் துணை ராணுவ வீரர்களை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

 

Related Stories: