80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி

பள்ளிபாளையம், பிப்.21: பள்ளிபாளையம் அருகே மின்கம்பி உரசி ஏற்பட்ட விபத்தில் 80 கட்டு வைக்கோலுடன் லாரி தீப்பிடித்து எரிந்தது. பள்ளிபாளையம் அடுத்துள்ள இறையமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்குமார், லாரி டிரைவர். இவர் மோளகவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்து, அங்குள்ள விவசாயிடம் 80 கட்டு வைக்கோல் வாங்கி, அதை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றார். மோளகவுண்டம்பாளையம் சுடுகாடு அருகே சென்றபோது, மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றி லாரிக்குள் விழுந்தது. காய்ந்த வைக்கோலில் விழுந்த தீப்பொறியால் லாரியில் தீப்பிடித்து எரியத்துவங்கியது.

இதை அறிந்த ஜெகன்குமார், லாரியை திறந்தவெளியில் நிறுத்தி விட்டு இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் காற்றின் வேகத்தால் தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும், பொக்லைன் மூலம் மண்ணை கொட்டி வைக்கோல்கள் தொடர்ந்து எரிவது தடுக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் வைக்கோல் உருளைகளுடன் சேர்த்து, லாரி முழுவதும் எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: