புதுடெல்லி: பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச பாலியல் குற்றவாளி ஜெப்ரீ எப்ஸ்டீன் குறித்த ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகியது. பல நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஜெப்ரீ எப்ஸ்டீனுடன் பாஜவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில், எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த ஹர்தீப்சிங்கை பதவி நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அந்த கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.பேபி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோருடன் எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்து தெளிவான சான்றுகள் இருந்த போதிலும் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கவோ, பொறுப்பு கூறலை உறுதி செய்யவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் அரசு அனுமதிக்கவில்லை.
எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து பல தனிநபர்கள் அந்தந்த நாடுகளில் தாங்கள் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பல உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படுவதற்குப் பதிலாக, ஹர்தீப் சிங் அனைத்து தந்திரமான வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறார். தேசிய அவமானத்தையும் அவமானத்தையும் மீட்டெடுக்க, ஹர்தீப் சிங் பூரியை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
