வேளாண், கல்வித்துறையில் ஏஐ பயன்பாடு: ஸ்டார்ட் அப் சிஇஓக்களுடன் பிரதமர் ஆலோசனை

புதுடெல்லி: வேளாண்மை, கல்வித்துறை உள்ளிட்டவற்றில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பிரதமர் மோடி ஸ்டார்ட்அப் நிறுவன சிஇஓக்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் ஏஐ தொழில்நுட்ப மாநாடு நடந்து வருகின்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று 16 ஸ்டார்ட்அப் மற்றும் டீப் டெக் நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிறுவனர்கள் பிரதமர் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்களது யோசனைகளையும், பணிகளையும் முன்வைத்தனர்.

அப்போது பிரதமர் மோடி, மண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பயிர் உற்பத்தி திறன் மற்றம் உர பயன்பாட்டை கண்காணித்தல் உட்பட வேளாண்மை, கல்வித்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தாய்மொழியில் உயர்கல்விக்கான ஏஐ கருவிகளை விரிவுபடுத்தல் உள்பட் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். சுகாதாரப் பராமரிப்பில் மேம்பட்ட நோயறிதல், மரபணு சிகிச்சை மற்றும் நோயாளிகள் பதிவு மேலாண்மைக்கு ஏஐயை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்தார்.

வலுவான தரவு நிர்வாகத்தின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப ஏஐ தொழில்நுட்பத்தில் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியா முயற்சியை ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெகுவாக பாராட்டின.
ஏஐ கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டின் உலகளாவிய வேகம் இந்தியாவை நோக்கி அதிகரித்து வருவதாகவும், இந்தியா இப்போது ஏஐ முன்னேற்றத்துக்கு ஆதரவான மற்றும் துடிப்பான சூழலை வழங்குவதாகவும், உலக அளவில் இந்தியா தனது இருப்பை உறுதியாக நிலைநிறுத்துவதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளன.

* பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா
டெல்லியில் ஏஐ மாநாட்டுக்கு இடையே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிகாவில் இந்தியா இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பொருளாதார விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் ஜேக்கப் ஹெல்பெர்க் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பாக்ஸ் சிலிக்கா கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா நம்பகமான ஏஐ தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளலாம். முக்கியமான கனிமங்கள் மற்றும் ஏஐ துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும் சிப் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் முதல் ஏஐ உள்கட்டமைப்பு வர அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

* இலங்கை அதிபருடன் மோடி சந்திப்பு
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “மதிப்புமிக்க ஒரு தலைவரை சந்தித்து பேசினேன். அப்போது இந்தியா, இலங்கை இடையேயான உறவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி இருவரும் மதிப்பாய்வு செய்தோம். மேலும், எரிசக்தி, பொருளாதார ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன், கலாச்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இருவரும் விவாதித்தோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: