ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் உள்ள சிஹோரா நகரில் இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மத்திய பிரதேசம்,சிஹோரா நகரில் ஆசாத் சவுக் பகுதியில் துர்காதேவி ஆலயமும், மசூதியும் அருகருகே அமைந்துள்ளன. நேற்று முன்தினம் கோயிலில் ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. அப்போது கோயிலின் பாதுகாப்பு கிரில் உடைந்தது தொடர்பாக இரண்டு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முதலில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் கலவரமாக மாறியது. கல்வீச்சு, கடைகள் மீது தாக்குதல், வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது. இதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
