பெங்களூரு: லஷ்கர் அமைப்புடன் இணைந்து சக கைதிகளை தீவிரவாத செயல்களில் ஈடுபடத்தூண்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. பெங்களூருவில் 2023ம் ஆண்டு பயங்கரவாத செயலை நடத்தி இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்தனர். பெங்களூரு சிறையில் உள்ள சாதாரண கைதிகளை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்த சிலர் தீவிரவாத செயல்களை நிறைவேற்றுவதற்காக சேமித்து வைத்திருந்த பங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள், டிஜிட்டல் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் 2008ம் ஆண்டு நடந்த பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி நசீர் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் தப்பிக்க உதவிடவும் இவர்கள் தயாராக இருந்தனர். இது குறித்து பெங்களூரு போலீசார் 2023ம் ஆண்டு பதிவு செய்த வழக்கை எடுத்துக்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கண்ட சதிச் செயலில் ஈடுபட்ட ஜூனைத் அகமது உள்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜூனைத்தின் தாயார் அனீஸ் பாத்திமா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த நசீருக்கு ஆயுத சப்ளை, பண உதவி வழங்கியுள்ளார்.
தனது மகனின் அறிவுறுத்தலின் பேரில் நசீரிடம் கையெறி குண்டுகள், வாக்கி டாக்கிகளை கொடுத்து பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள உதவி செய்துள்ளார். அதே போல் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சல்மான்கானுக்கு பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்து துபாய் தப்பி செல்ல உதவி செய்துள்ளார். இவரை என்ஐஏ அதிகாரிகள் ருவாண்டா நாட்டில் கைது செய்து இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜூனைத் அகமதுவை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் நடவடிக்கையாக ஜூனைத் அகமது குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
