இந்தியா -அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கர்களை மகிழ்விக்க இந்திய விவசாயிகள் பலியிடப்பட்டது ஏன்? வீடியோ வெளியிட்டு ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: இந்தியா -அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜ அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல்காந்தி கூறியதாவது,” நான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஆற்றிய உரையில் ஜியு-ஜிட்சு ஒப்புமையை பயன்படுத்தியது ஏன்? அமெரிக்கர்களை மகிழ்விப்பதற்கு நமது விவசாயிகள் ஏன் பலியிடப்பட்டனர்.

நமது எண்ணெய் விநியோகங்களை அமெரிக்கா சர்வாதிகாரம் செய்ய அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்பட்டது? பரஸ்பர வாக்குறுதி இல்லாமல் அமெரிக்க இறக்குமதியை ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? இந்த ஒப்பந்தம் இந்தியாவை ஒரு தரவு காலனியாக மாற்றும் என்று நான் ஏன் கூறினேன்? இந்தியா இவ்வளவு கொடுத்து மிகக் குறைவாக பெறும் ஒரு ஒப்பந்தத்திற்கு மோடி ஜீ ஏன் ஒப்புக்கொள்கிறார்? இந்த மோசமான சரணடைதலுக்கான பதில் பிரதமரின் மீது வைக்கப்படும் இறுக்கமான பிடியும், கழுத்தை நெரித்து பணிய வைப்பதிலும் உள்ளது.

நாடாளுமன்ற உரையில் ஜியு-ஜிட்சுவை பயன்படுத்தியது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நான் பிடியை இறுக்குதல் , கழுத்தை நெரித்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக காரணம் , எதிராளியை தரையில் சாய்த்து நுட்பமான பிடிகள் மூலமாக சரணடைய வைக்கும் நுணுக்கமான தற்காப்பு கலையான ஜியு- ஜிட்சுவில் இவை இருக்கின்றது. அந்த விளையாட்டில் ஒரு எதிரியை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதே. ஆனால் அவை அரசியல் துறையிலும் இருக்கின்றன. மேலும் எனது அரசியல் அனுபவத்தில் அரசியல்கள் பிடிகள் மற்றும் அரசியல் கழுத்தை நெரித்தல் பெரும்பாலும் மறைக்கப்பட்டு இருப்பதை கண்டு இருக்கிறேன்.

சராசரி மனிதர்களால் அவற்றை பார்க்க முடியாது. எங்கு பிடி இறுக்கப்படுகின்றது, எங்கு நெரிக்கப்படுகின்றது என்பதை பார்ப்பதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது தான் நமது பிரதமர் என்ன செய்கிறார் என்பதை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தியது. ஒருபுறம் அமெரிக்காவில் தொழிலதிபர் கவுதம் அதானியின் மீது குற்றவியல் வழக்கு இருக்கின்றது. மறுபுறம் எப்ஸ்டீன் கோப்பு உள்ளது. 30லட்சம் கோப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கோப்புக்களில் இடம்பெற்றுள்ளார் என்பது நமக்கு தெரியும். அனில் அம்பானியின் பெயர் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதும் நமக்கு தெரியும்.

மேலும் பிரதமரின் பெயரும் அதில் உள்ளது. இன்னொரு புறம் சீனா உள்ளது. ஒருபுறம் எல்லையில் அமர்ந்திருக்கும் சீனர்கள் உள்ளனர். மறுபுறம் அமெரிக்கா உள்ளது. நமது பிரதமர் இந்த பிடிகளுக்கு இடையில் சிக்கியிருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். பிரச்னை என்னவென்றால் பிரதமர் மோடியின் மீதான உண்மையான பிடி என்பது அவர் உருவாக்கிய போலி பிம்பம். அந்த பிம்பத்தின் திறவுகோல் இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது. அதனால் தான் விவசாயிகள் பாதிக்கப்படப் போகிறார்கள். நமது தரவுகளை மோடி அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு அற்ப விலைக்கு ஒப்படைக்கிறார் என்பது தான் உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: