நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் ஏப்.1 முதல் பணம் செலுத்தும் முறைக்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலனை

புதுடெல்லி: வரும் ஏப்.1 முதல் நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் ரொக்க பணம் செலுத்தும் முறையை நிறுத்துவது பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(என்எச்ஏஐ) பரிசீலித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடி மையங்களில் வரும் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்தி பயணம் செய்ய முடியும். ஆனால் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கசாவடி மையங்களுக்கு வரும் வாகனங்கள் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் முறையை நிறுத்த என்எச்ஏஐ பரிசீலித்து வருகிறது.

இது குறித்து என்எச்ஏஐ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முழுமையான டிஜிட்டல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அமைப்பை உருவாக்குவதற்காக, வரும் ஏப்ரல் 1, முதல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடியில் வசூல் ஆகும் தொகையை ஒருங்கிணைப்பதும், சுங்கச்சாவடி செயல்பாடுகளின் செயல்திறன், நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம். ரொக்க அடிப்படையிலான கட்டணங்கள் நெரிசல், மிகுந்த போக்குவரத்து காலங்களில் அதிகரித்த காத்திருப்பு நேரங்கள் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சைகள் உருவாகின்றன என்பதை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது செயல்படுத்தப்பட்ட பின், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் அல்லது யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்தி கட்டணம் செலுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: