திமுக ஆட்சியின் சாதனைகள் மக்களுடைய மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ் திடீரென நேற்று சந்தித்து பேசினார். அதன்பிறகு பேட்டி அளித்த அவர், திமுக ஆட்சி செய்துள்ள சாதனைகள் மக்களுடைய மனதில் ஆழமாக பதிந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காமல், எடப்பாடி அணி அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையை புறக்கணித்தாலும், ஓ.பன்னீர்செல்வம், ஐயப்பன் ஆகிய 2 அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தநிலையில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென தனியாக சந்தித்து பேசினார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தகவல் வெளியாகி இருந்தாலும், அரசியல் கூட்டணி மற்றும் தமிழக அரசியல் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதே நேரம் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி என்று இதுவரை அறிவிக்காத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

5 ஆண்டு கால திமுக ஆட்சி இன்றைக்கு சிறப்பாக நிறைவுபெற்றதன் காரணமாக முதலமைச்சரை சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்திருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் திமுக ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் வருவார் என்று உங்கள் அணியை சேர்ந்த ஐயப்பன் சட்டப்பேரவையில் இன்று பேசி இருக்கிறார். அதற்கு உங்கள் கருத்து என்ன?

அவருடைய வாழ்த்துகள், அவருடைய எண்ணம், செயல்பாடு தமிழக மக்கள் இன்றைக்கு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் இன்றைக்கு சட்டப்பேரவையில் சொல்லி இருக்கிறார். இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன? பொதுவான கருத்து… இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுகால அரசியல் சூழ்நிலை, திமுக ஆட்சி இந்த நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் எல்லாம் மக்களுடைய மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்ற கழகத்துக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு வழி பிறந்திருக்கிறது. உங்களுடைய அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? பொறுமையாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* தேமுதிகவை தொடர்ந்து திமுக கூட்டணியில் ஓபிஎஸ்?
முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை வளாகத்தில் திடீரென நேற்று சந்தித்து பேசியது, பின்னர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தேமுதிகவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் திமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகி உள்ளது.

Related Stories: