புதுச்சேரியில் அனுமதியின்றி சவாரி கடலில் படகு கவிழ்ந்து பெண் சுற்றுலா பயணி பலி

*2 பேருக்கு தீவிர சிகிச்சை

புதுச்சேரி : பெங்களூரு ஏசி கோஸ்ட் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சோனியா(33). இவர்களுக்கு சத்தீஸ்வரி, சதீஷ், அஸ்வின் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விஜய் தனது மைத்துனர் சஞ்சய், அவரது மனைவி சந்தியா(24) உள்பட உறவினர்கள் 8 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். தொடர்ந்து, அனைவரும் வீராம்பட்டினத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

நேற்று காலை பாண்டி மெரினாவில் இருந்து படகு சவாரிக்காக வீராம்பட்டினத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் படகை,தங்கமணி என்பவர் சவாரிக்கு ஓட்டி சென்றார். இதில் விஜய் மற்றும் அவரது உறவினர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது, புதுச்சேரி துறைமுக முகத்துவாரம் பகுதியில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கடலில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 8 பேரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினர்.

அப்போது, அருகில் மற்றொரு படகிலிருந்த மீனவர்கள் கடலில் விழுந்தவர்களை கரைக்கு மீட்டு வந்தனர். இதில் கடலில் விழுந்த சோனியா மூச்சு திணறி உயிரிழந்திருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்தியா மற்றும் சத்தீஷ்வரி ஆகியோரை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், லேசான காயமடைந்த மற்ற 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் வீராம்பட்டினம் என்பதால், அரியாங்குப்பம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான படகு உரிய அனுமதி இல்லாமல் இயக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தப்பிய சதீஷை கைது செய்தனர். மேலு்ம் தங்கமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடரும் விபத்துகள்

பாண்டி மெரினா, முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், தேங்காய்திட்டு ஆகிய பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் மீன்பிடி படகுகள் மூலம் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் எழுந்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதேபோல், கடந்த ஆண்டு 10 பேரை ஏற்றி சென்ற தனியார் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அனுமதி இல்லாத படகு சவாரி முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு அதற்கான நவீன படகுகள், உயிர்காக்கும் உபகரணங்கள், பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை மட்டும் வைத்து படகு சவாரி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: