இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விமானத்தில் சென்னை வந்தனர்: சொந்த ஊருக்கு திரும்பினர்

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள் கடந்த 2025 ஜூலை 23ம் தேதி, விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதிகாலை நேரத்தில் அவர்கள், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 பேரை கைது செய்தனர்.

விசைப்படகு, வலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.

இதையடுத்து, இலங்கை நீதிமன்றம், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக மீனவர்கள் 11 பேரையும் விடுவித்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்கள் 11 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். மீனவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி மீனவர்கள் 11 பேருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கப்பட்டு டிக்கெட்களுக்கு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மீனவர்கள் 11 பேரும் நேற்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: