மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் செயின் பறித்த கும்பல் சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை தொரப்பாடி, சாத்துமதுரை பகுதிகளில் கைவரிசை

வேலூர், பிப்.10: வேலூர் தொரப்பாடி, சாத்துமதுரை பகுதிகளில் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் செயின் பறித்த ஹெல்மெட் ஆசாமிகளை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த பள்ளஇடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமி, கார்பெண்டர். இவரது மனைவி ரமணி(47). இவர் கடந்த 7ம் தேதி வேலூர் பெண்கள் சிறை அருகே மொபட்டில் வந்தார். அப்போது, அவ்வழியாக பின்னால் பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த 2 பேர் திடீரென ரமணி அணிந்து கழுத்தில் அணிந்து இருந்த மூன்றே முக்கால் சவரன் செயினை பறித்தனர். இதில் ரமணி லேசான காயமடைந்தார். இதுகுறித்து ரமணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், வேலூர் அடுத்த அடுக்கம்பாறை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் ஷாலினி(39).

இவர் கடந்த 7ம் தேதி வேலூர்- ஆரணி சாலையில் சாத்துமதுரை அருகே மொபட்டில் வந்தபோது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் ஷாலினி கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதில் ஷாலினி படுகாயமடைந்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வேலூர்- ஆரணி சாலை மற்றும் பாகாயத்தில் இருந்து தொரப்பாடி செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வேலூர்- ஆரணி சாலை சாத்துமதுரையில் மொபட்டில் சென்ற ஷாலினியிடம் 2 சவரன் செயின் பறித்த ஹெல்மெட் ஆசாமிகள் தான் பாகாயத்தில் இருந்து தொரப்பாடி செல்லும் சாலையில் ரமணியிடம் மூன்றே முக்கால் சவரன் பறித்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனால் 2 இடங்களிலும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பல் என தெரியவந்தது. மேலும் அந்த ஹெல்மெட் ஆசாமிகள் பயன்படுத்திய பைக்கில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கி உள்ளனர். பெண்களிடம் நகை பறித்த பைக் ஆசாமிகள் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: