பேரணாம்பட்டு,பிப்.14: பேரணாம்பட்டு அருகே ஒற்றை காட்டு யானை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததால் தென்னை, நூக்கல் பயிர்கள் சேதம் அடைந்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாரங்கல், பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், டிடி மேட்டூர், குண்டலபல்லி, போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள வன விலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களிலும் கிராமங்களிலும் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, கால் நடைகளையும் தாக்கி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல் கிராமத்தை சேர்ந்த தேவ்நாத் சங்கரின் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை நேற்று அதிகாலை 2.30 மணியளவில் புகுந்து நிலத்தில் இருந்த 12க்கும் மேற்பட்ட தென்னை மரக்கிளைகளை உடைத்தும், நிலத்தில் இருந்த நூக்கல் பயிர்களை சாப்பிட்டு மிதித்து சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்த விவசாயி இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் விவசாயி, பொது மக்கள் உதவியுடன் கத்தி கூச்சலிட்டு பானங்கள் விட்டு வெடித்தும், மேள தாளங்கள் அடித்து பட்டாசுகள் வெடித்தும் ஒற்றை காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
