சுயேச்சைகளின் வெற்றித் தொகுதி புவனகிரி..? ஜெயலலிதாவே ஆதரவு அளித்த அதிசயம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய தொகுதி புவனகிரி சட்டமன்றத் தொகுதி ஆகும். மாநகராட்சி, நகராட்சி போன்ற பெரிய நகரங்கள் இல்லாமல் 3 பேரூராட்சிகளை மட்டுமே கொண்டு, ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய மிகவும் பின்தங்கிய தொகுதி புவனகிரி. இந்த தொகுதியில் பல தேர்தல்களில் அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு புவனகிரி தொகுதியில் அதிமுக சார்பில் கருணாநிதி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது துரதிர்ஷ்டவசமாக அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு சேர்ந்து அவரது மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்தவரின் மனுவும் தள்ளுபடி ஆனது. அதனால் அந்த தேர்தலில் புவனகிரி தொகுதியில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர் பி.எஸ்.அருள் என்பவரை ஆதரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அவருக்கு வாழைப்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் அருள் 49,753 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் தமிழ் தேசம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இந்தியன் வங்கித் தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன் 45,989 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் 23,291 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் அந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட எம்.ஏ. அபுசாலி 28,615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

அதன்பிறகு 1980ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு 41,207 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கே.எஸ்.அசனுதீன் 34,883 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.சிவலோகம் 39,430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளரான ஆர். ராதாகிருஷ்ணன் 17,553 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

இப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் இந்த தொகுதியில் 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெறுகின்றனர். சில நேரங்களில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சி அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி தோல்விக்கான வித்தியாசத்தை விட சுயேச்சைகள் அதிக வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றியையே திசை திருப்பி விடுகின்றனர். அந்த அளவுக்கு சுயேச்சை வேட்பாளர்களின் ஆதிக்கம் நிறைந்த புவனகிரியில் இந்த பொதுத்தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிட பலரும் தயாராகி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன் வெற்றி பெற்றார்.

Related Stories: