இடைக்கால பட்ஜெட்: அதிமுக விமர்சனத்துக்கு தமிழக அரசு பதிலடி; புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று விளக்கம்

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்ைட தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம்.

அதன்படி தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் இன்று காலை தாக்கல் செய்தனர். இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்பது இருக்காது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு தான் நிதி ஒதுக்கப்படும் அது தான் மரபு. இது தான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அது எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போதும் சரி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் சரி. ஏன் எடப்பாடி முதல்வராக இருந்த போதும் இது தான் நடைமுறையாக இருந்து வந்தது.

ஆனால் இன்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்க வந்த அதிமுகவினர், இடைக்கால பட்ஜெட்டை நூதன முறையில் விமர்சனம் செய்திருந்தனர். அதாவது பட்ஜெட் என்ற பெயரில் ‘மாபெரும் காது குத்தும் விழா’ நடைபெற உள்ளது என பத்திரிகை அச்சடித்து அதிமுகவினர் வழங்கினர். அதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா. விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும். பின்குறிப்பு: சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல முறைகளில் மொய் வைக்கலாம்” என்றும் அந்த பத்திரிகையில் அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரால் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும்.இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்து இருப்பதும், அதற்கு தமிழக அரசு சார்பில் உடனடியாக பதிலடி கொடுத்தது பேசும் பொருளாகியுள்ளது.

Related Stories: