அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை: இரு தரப்பும் பரஸ்பரம் சரமாரி கேள்வி

சென்னை: அண்ணாமலை மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. திமுக பைல்ஸ் என்ற பெயரில் கடந்த 2023ம் ஆண்டு அண்ணாமலை வெளியிட்ட விவகாரத்தையடுத்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலையின் பேட்டி உள்ளதாக கூறி அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அண்ணாமலை தரப்பில் டி.ஆர்.பாலுவிடம் நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. இதற்காக அண்ணாமலையும் டி.ஆர்.பாலுவும் ஒரே நேரத்தில் சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் ஆஜரான பிறகு குறுக்கு விசாரணை தொடங்கியது. அண்ணாமலையும் டி.ஆர்.பாலும் ஒருவரை ஒருவர் குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டனர். காரசாரமாக வாதங்கள் நடந்தது. சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், சுய லாபம் அடைவதற்காகவும் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது 10 மீன் பிடி கப்பல்களை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கியுள்ளதாகவும் அதனால்தான் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை என்று மு.க.அழகிரி அப்போது கூறியதாக பேட்டியில் உள்ளது என்று அண்ணாமலை கூறினார். இதற்கு டி.ஆர்.பாலு, மு.க.அழகிரி அவ்வாறு சொல்லவில்லை. அவ்வாறு சொல்வதற்கு தகுதியானவர் பிரதமர் மட்டும் என்று பதிலளித்தார்.

சேது சமுத்திரம் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்ததே தூர்வாருவது மூலம் பணம் சம்பாதிக்க தான். வல்லுநர்களால் சாத்தியமில்லாத திட்டம் என்று கூறப்பட்டபோது அந்த திட்டத்தை டிஆர்.பாலு கொண்டுவந்ததாக அண்ணாமலை கேட்டார். அதற்கு டி.ஆர்.பாலு, இது சரியில்லை தவறானது. உள்நோக்கம் கொண்டது. செய்தி வேறு விதமாக உள்ளது. ஆனால் அதை உள்நோக்கத்துடன் வேறு விதமாக அண்ணாமலை கேட்கிறார். சேது சமுத்திர திட்டம் என்பது காமராஜரின் கனவு திட்டம். வாங்கப்பட்டதாக கூறப்படும் 10 கப்பலில் 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டது.

விஷயம் தெரியாமல் தரப்பட்ட பேட்டியை அண்ணாமலையும் அரைவேக்காட்டு தனமாக அதை ஆதாரமாக கொடுக்கிறார். சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அதில் கப்பல்கள் செல்ல 18 மீட்டர் ஆழம் தோண்டப்பட வேண்டும். ஆனால், மீன்பிடி கப்பல்களுக்கு 6 மீட்டர் ஆழம் போதும் என்று தெரிவித்தார். இதேபோல், மது ஆலை, கார், சொத்துகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்கும் டி.ஆர்.பாலு விளக்கமாக பதிலளித்தார். இருவரின் குறுக்கு விசாரணை முடிவடையாததையடுத்து மாஜிஸ்திரேட் செந்தில் குமார் அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: