‘உங்க வாக்கு எங்களுக்கு வேணும் அதனாலதான் கரெக்ட் பண்றோம்’ சுயேச்சைகளை வளைக்கும் தவெக பிரமுகர்

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் தவெக சார்பில் டாக்டர் பிரபு போட்டியிடுகிறார். இவரது கட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஞ்சனை ராமசாமி இணைந்தார். அவர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு போன் செய்து பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆடியோ உரையாடல் வருமாறு:

உஞ்சனை ராமசாமி: சுயேச்சையாக நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளீர்கள். எங்களது வேட்பாளர் டாக்டர் பிரபுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஏதாவது செய்து கொடுத்து அங்குள்ள வாக்குகளை வாங்கி தந்தால், நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக அமையும். சுயேச்சை வேட்பாளர்: கடந்த தேர்தலில் நான் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வாங்கியுள்ளேன். உஞ்சனை ராமசாமி: இல்லையென்று கூறவில்லை, நீங்கள் வாங்கியதை வைத்துதான் பேசுகிறோம். எங்களுக்கு அந்த வாக்கை வாங்கி கொடுங்கள். பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை. 500, 1000 வாக்குதான் வெற்றி பெறப்போவதே.

அதனை எங்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை கரெக்ட் செய்கிறோம். சுயேச்சை வேட்பாளர்: எனக்கு நன்றாக வாய்ப்பு உள்ளது. மக்கள் என்னை நன்றாக ஊக்குவித்துள்ளார்கள். கண்டிப்பாக நான் போட்டியிடுகிறேன். உஞ்சனை ராமசாமி: நன்றாக நில்லுங்கள், எங்களுக்கு வாக்கு வாங்கி தரக்கூடிய எண்ணம் இருந்தால் செய்து கொடுங்கள். வேறு யாரும் சொல்லி நீங்கள் நின்றால் அது உங்களுக்கும் ஆகாமல், எங்களுக்கும் ஆகாமல் போய்விடும். நாளை நாங்கள் உங்களுக்கு சின்ன உதவியாவது செய்வதுபோல் வரும். சொல்லவில்லை என வருத்தப்பட வேண்டாம்.

இவ்வாறு முதல் சுயேச்சையிடம் உஞ்சனை ராமசாமி பேசுகிறார். இதை தொடர்ந்து இரண்டாவது சுயேச்சை வேட்பாளர் மணிகண்டனிடம் பேசியதாவது: உஞ்சனை ராமசாமி: எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளீர்கள். எனக்காக இந்த முறை மட்டும் இறங்கி வேலைபார்க்க வேண்டும். டாக்டர் பிரபுக்கு நான் ஆதரவு தெரிவித்து பணியாற்றுகிறேன். உங்களால் 100, 200 வாக்கு குறைந்தாலும் வெற்றி பெறுவது குறைந்துவிடும். வெற்றி வாய்ப்பே கொஞ்சம் ஓட்டில் தான் உள்ளது. யார் போட்டியிட கூறியிருந்தாலும் அதனை விட்டுவிட்டு வாபஸ் வாங்கி வேலைபாருங்கள். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து கொடுக்கிறேன். மணிகண்டன்: பிரபு என்பவர் காரைக்குடியா? உஞ்சனை ராமசாமி: டாக்டர் பிரபு விஜய் கட்சியில் நிற்கிறார். நல்ல பையன்.

இந்த முறை ஓட்டு போட்டு பார்ப்போம். உங்களின் ஒத்துழைப்பு வேண்டும். சுப்பிரமணி என்பவர் பேசுவார். என்ன செய்ய வேண்டும் என கூறுகிறீர்களோ அதனை செய்யச் சொல்வோம். வந்து நின்று வேலை பார்க்க வேண்டும். நீங்கள் வாபஸ் வாங்குவது பெரியது கிடையாது. எனக்கு வேலை செய்து ஓட்டு வாங்கி கொடுத்து விட வேண்டும். மணிகண்டன்: நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். பின்னர் கூப்பிடுகிறேன் என கூறி போனை வைத்து விட்டார். விஜய் கட்சிக்கு ஆதரவாக சுயேச்சை வேட்பாளர்களை வாபஸ் பெறக்கோரி கட்சி நிர்வாகி பேசும் ஆடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: