புதுச்சேரியில் நாராயணசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்: காங்கிரசை பாராட்டிய அமித்ஷாவால் பரபரப்பு

காரைக்காலில் நகராட்சி சந்தை திடலில் பாஜ பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழியிலே என்னாலே இங்கே உரையாற்ற முடியவில்லை என்பதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை நான் தொடர்கிறேன். 2021 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலே புதுச்சேரி மக்கள் நமக்கு 44 விழுக்காடு ஆதரவளித்திருக்கின்றார்கள். 30 இடங்களிலே 16 சீட்டுகளை நமக்கு அளித்திருக்கின்றீர்கள்.

ஆனால் இந்த முறை, நாம் நம்முடைய கூட்டணி கட்சிகள், பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து என்.ஆர்.சி, அதிமுக இந்த கட்சிகளெல்லாம் சேர்ந்து 60 சதவீத வாக்குகளை பெறுவோம். நாம் 24 சீட்டுகளையும் நமதாக்கி கொள்வோம். புதுச்சேரிக்காக பிரதமர் மோடி 9 அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதற்கான திறப்பு விழாக்களை நடத்த இருக்கிறார். ‘வளர்ச்சி புதுச்சேரி’ என்ற நிலையிலே நாம் இதை ஆக்க வேண்டும். அதற்காக ரங்கசாமி, மோடி தலைமையிலே உங்களுடைய பெருந்திரளான ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு, என்டிஏ அரசாங்கத்திற்கு நீங்கள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, அமித்ஷா பேசுகையில், ‘இங்கு முதலமைச்சாராக இருக்ககூடிய நாராயணசாமி (முன்னாள் காங்கிரஸ் முதல்வர்) சிறப்பான ஆட்சியை அளித்து கொண்டு இருக்கிறார்’ என கூறினார். இதை அப்படியே மொழி பெயர்த்த சுதர்சன் என்பவர் சொன்னார். இதனால், கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே சுதாரித்த அமித்ஷா, மொழி பெயர்ப்பாளரிடம் நாராயணசாமி என்பதற்கு பதிலாக ரங்கசாமி என்று கூறினார். அதை அப்படியே அவரும் சொன்னார். கூட்டணி கட்சி முதல்வரின் பெயரை கூட தெரியாமல் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

* கருப்புக்கு தடை: பெண்ணிடம் துப்பட்டா பறிப்பு
காரைக்கால் சந்தை திடலில் நடைபெற்ற அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க கருப்பு துப்பட்டா அணிந்து வந்த பெண்ணை சோதனை செய்து, துப்பட்டாவை கழற்றி வைத்துவிட்டு அரங்கில் நுழைய காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து கருப்பு துப்பட்டாவை கழற்றிவிட்டு பெண் பொதுக்கூட்ட அரங்கில் நுழைந்தார். இதேபோல கருப்பு துண்டு, கருப்பு நிற பொருட்களை எடுத்து வரும் நபர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பொதுக்கூட்டத்திற்கு வந்தோர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

* அதிக தொகுதிகள் வேணும்… ரங்கசாமியை மிரட்டிய அமித்ஷா
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அரசு அனுப்பும் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து போட மறுப்பது, ஆட்சியில் தலையீடுவது போன்ற காரணங்களால் பாஜ மீது அதிருப்தியில் இருந்த ரங்கசாமி கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டார். ஆனால், அவரை மிரட்டிய பாஜ, மீண்டும் கூட்டணியை உறுதி செய்து உள்ளது. இந்நிலையில், காரைக்காலில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்துக்கு பிறகு தனியார் ஓட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் ரங்கசாமி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜவுக்கான தொகுதிகள் எத்தனை என்பது இறுதி முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்த முறை ஒற்றை இலக்க தொகுதிகளில் களமிறங்கிய பாஜவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கும்படி ரங்கசாமியிடம் அமித்ஷா மிரட்டியதாக தெரிகிறது.

அதை ரங்கசாமி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகிறது. அதேவேளையில் அதிமுக, லஜகவுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கப்படும் என தெரிகிறது. அமித்ஷா-ரங்கசாமி சந்தித்து 20 நிமிடம் வரை நீடித்தது. தொடர்ந்து புதுவை தேர்தல் பொறுப்பாளர் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜ தலைவர் ராமலிங்கம் ஆகியோரையும் அழைத்து அமித்ஷா பேசினார். அப்போது பாஜவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டது. பின்னர் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் சார்லஸ் சந்தித்து சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். அமித்ஷாவை சந்தித்தபின் ரங்கசாமி, நிருபர்களிடம் கூறுகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடரும் என கூறிவிட்டு சென்றார்.

* அதிமுகவுக்கு சரிவு தொண்டர்கள் வேதனை
தமிழகத்தில் பாஜவால் சரிவை சந்தித்துள்ள அதிமுக, புதுச்சேரியிலும் கடந்த காலங்களில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது. ஜெயலலிதா மறைவுக்குபின் அக்கட்சி புதுச்சேரியிலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த பொதுத்தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாத அதிமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்பினாலும் கட்சித் தலைமை மவுனமாக இருப்பதால் அக்கட்சி தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். இந்த முறை அதிமுகவுக்கு 2 சீட் மட்டுமே தர பாஜ முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் தமிழகத்தில் தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக, பாமக (அன்புமணி) அணி கட்சியின் புதுச்சேரி நிலைப்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: