அதிமுக மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை தேர்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1947ம் ஆண்டு கிரிஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் பிறந்த தம்பிதுரை, இந்தி எதிர்ப்பு போராட்டாத்தில் பங்கேற்றார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தார். 1977ல் ஈரோடு எம்எல்ஏவாகவும், 1984, 1989, 1998 ஆகிய ஆண்டுகளில் கரூரில் இருந்தும் 2009, 2014ம் ஆண்டுகளில் தர்மபுரியில் இருந்தும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2001ம் ஆண்டு பர்கூர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். மேலும், 1998 முதல் 1999ம் ஆண்டு வரை சட்டம் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை மக்களவை துணை சபாநாயகராக இருந்தார். 2019ம் ஆண்டு கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது 2வது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

* பாமகவுக்கு ஒரு சீட்
தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 4 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால், அதிமுக ஒரு தொகுதியிலும், பாமக ஒரு தொகுதியில் போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். இந்த சீட்டுக்கு அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: