சுயமாக அரசியலுக்கு வரல… யாரோ ஏவி விட்டு இருக்காங்க… தன்னுடைய பாதகமான நிலைக்கு பாஜவிடம் பரிகாரம் தேடும் விஜய்: அமைச்சர் பெரியகருப்பன்

1. கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தத் தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற வாக்குறுதிகள் இடம்பெறுமா?
பொதுவா சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்ற முக்கியமானது, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள், அதாவது பயிர்க்கடன் ஏறத்தாழ ரூ.12,000 கோடி, விவசாய பெருங்குடி மக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த சகோதரிகளுக்கு ரூ.2,500 கோடி அளவிலும், 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக வைத்தவர்கள் ரூ.5000 கோடி என கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ரூ.20,000 கோடியில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு மக்கள் ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருந்தார்கள். அந்த நிலை இன்றைக்கும் நீடிக்கிறது.
அதேபோல, இந்தத் தேர்தல் அறிக்கையில் இது போன்று எம்மாதிரியான வாக்குறுதிகள் இடம்பெறும் என்ற கேள்விக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. கடந்த 10 நாட்களில் ஒரு கோடியே 31 லட்சம் தாய்மார்கள், சகோதரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் 38 லட்சம் பேருக்கு ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் யாருமே சொல்லாமல் செய்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே, திமுக சார்பில் எதிர்கொள்ளக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிக்கை தயாரிப்பதற்கு கனிமொழி தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேவைகளைக் கேட்டுப் பெற்றுள்ளனர். அந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் தலைவர் அறிவிப்பார்.

2. மாநிலத்தில் கூட்டணிக்குத் தலைமையாக இருக்க வேண்டிய அதிமுக, பிஜேபியுடன் பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்துகிறது. இப்படி பிஜேபியுடன் அதிமுக இருப்பது திமுகவிற்கு சாதகமா? பாதகமா?
பொதுவாக திராவிட இயக்கத்தினுடைய கொள்கை, அது அண்ணா காலமாக இருந்தாலும் சரி, கலைஞருடைய காலமாக இருந்தாலும், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தான் அதனுடைய தத்துவம். அதை இன்றைக்கும் நம்முடைய திமுக தலைவர் தலைமையிலான அரசு முறையாக கடைபிடித்து வருகிறது. அதுல எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை.

கூட்டணி பற்றித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றை எல்லாம் பேசவேண்டிய இடம் தமிழ்நாட்டுல, தலைநகரத்துல இங்க நடக்குமே தவிர, அதைத் தவிர்த்து டெல்லியிலே நடப்பது எந்த வகையிலே நியாயம்? இது அதிமுக என்ற 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு இயக்கத்தை, திராவிட இயக்கச் சிந்தனை உள்ள அந்த இயக்கத்தை, பழனிசாமி இடமிருந்து பாரதிய ஜனதா கபளீகரம் செய்திருக்கிறது என்பதற்குத் தான் அது அர்த்தமாக அமைந்திருக்கிறது.

ஆகவே டெல்லி எஜமானர்களுடைய அந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பழனிசாமி அடிபணிந்து அதிமுகவை இன்றைக்கு பாஜவிடம் அடகு வைத்து விட்டார் என்ற கருத்து நிறுவனமாகியிருக்கிறது. கடந்த காலங்களில் ஜெயலலிதா காலத்தில் கூட பாஜவுடன் உடன்பாடு ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. இதெல்லாம் பார்க்கையில் தமிழ்நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள், நம்முடைய மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத முதலமைச்சராக இருக்கின்ற திமுகவினுடைய தலைவர் தலைமையிலான கூட்டணியைத் தான் விரும்புவார்கள். எனவே அதிமுகவின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவுக்கு சாதகமாக அமையும்.

3. தேமுதிக மற்றும் ஓபிஎஸ் திமுகவுடன் வந்திருப்பதால் தென் மாவட்டங்களில் யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?
தென் மாவட்டங்களில், கடந்த காலத் தேர்தல்களான நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்பொழுது, அது திமுக தலைவர் தலைமையிலான கூட்டணிக்குத் தான் ஒரு பெரிய வெற்றிக் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே வலுவாக இருக்கின்ற தலைவருடைய தலைமையிலான கூட்டணிக்கு, இன்னும் தேமுதிக மற்றும் ஓபிஎஸ் போன்ற பிரிவுகள் எல்லாம் வந்து சேர்வது இன்னும் கூடுதல் பலத்தைத் தரும். கடந்த காலத்தை விடக் கூடுதலான வெற்றியைத் தென் தமிழகத்தில் நாம் பெற முடியும். திமுகவிற்கு நல்ல பலனைத் தரக்கூடிய கூட்டுகள் தான், வரவுகள் தான்.

4. விஜய் போகிற பக்கமெல்லாம் திமுகவை மட்டுமே விமர்சிப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. விஜய்யும், திமுக – டிவிகே இடையே தான் போட்டி என்றும் சொல்கிறார். அவர் ஏன் திமுகவை மட்டும் விமர்சிக்க வேண்டும்? அவர் சொல்லும்படி திமுக – டிவிகே இடையே தான் போட்டியா?
விஜய் அவர் சுயமாக அரசியலுக்கு வந்திருக்கிறாரா? அல்லது யாராவது அவரை ஏவி இருக்கிறார்களா? என்ற ஐயப்பாடு தான் அவருடைய பேச்சுக்களின் மூலமாகத் தெரிகிறது. ஒற்றை எதிரியாக அதிமுகவையும் அவர் சாடுவதில்லை. பிஜேபியைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஆனால் திமுகவை தான் முழுமையாகச் சாடுகின்ற ஒருவராக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், பத்தாண்டுக் காலம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து ஜனநாயகப் படுகொலையாக செய்திருந்தாலும் , ஊழல் போன்றவற்றை செய்திருந்தாலும் அதிமுகவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காதவர் விஜய்.

அதுமாதிரி பிஜேபி, நம்முடைய மாநில உரிமைகளைப் பறித்து, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் டெல்லியிடம் கபளீகரம் செய்கின்ற பாஜகவைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால் திமுக, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இந்த இயக்கத்தை, இந்தத் தலைமையை மட்டுமே தாக்குவது, அது புரியாத புதிராக இருக்கிறது. அவர் யாரால் ஏவப்பட்டிருக்கிறார் என்பதெல்லாம் போகப் போகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். இன்னும் அவர் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய ரசிகர்கள் எல்லாம் சொல்ற மாதிரி 100 கோடி, 200 கோடி, 300 கோடி, 500 கோடி, 1000 கோடி என்றெல்லாம் ஒரு படத்தின் மூலமாக அவர் ஈட்டுகிறார் என்ற அந்த நிலையில், அவருடைய திரைப்படத்திற்கே இன்றைக்கு ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. அது வெளியிடப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்குக்கூட ஒரு கேள்வியை இதுவரை பாஜவைப் பார்த்து கேட்காதவர். எப்படி எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள் இருக்கும் என்று கேள்விக்குறி தான். தனக்கு, தன்னுடைய பாதகமான நிலைக்குப் பரிகாரம் தேடுவதற்கு கூட பாஜவிடம் எதிர்த்து கூட கேட்க வேண்டாம், ஒரு வேண்டுகோளாகக் கூட இதுவரை வைக்காதது எந்த வகையில் நியாயம்? போகப் போகத் தெரியும்.

Related Stories: