திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள்: ஒரு ராஜ்யசபா சீட்: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: திமுக – காங்கிரஸ் இடையே நடந்த சுமுகமான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எடப்பட்டு, நேற்று இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அந்த அளவுக்கு தேர்தல் பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைத்துள்ள திமுக, தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது. பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. முதலில் காங்கிரஸ் 41 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுக புதிதாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கும் கவுரவமான முறையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த முறை 25 தொகுதிகள் தான் வழங்க முடியும், என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்து மீண்டும் கிரிஷ் சோடங்கரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்பதற்கு திமுக மறுத்ததால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை குறித்து இருதரப்பும் வெளிப்படையாக எதையும் கூறாமல் இருந்த நிலையில், இறுதியாக 25 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்ததாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்ததும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென கண்டிப்பான முறையில் தெரிவித்தது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் கூட்டணி முடிவை காங்கிரசிடமே திமுக விட்டு விட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. மேலும், காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என திமுக உறுதி அளித்திருந்தது.

இதனால் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நேற்று முன்தினம் இரவுக்குள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தமிழக கூட்டணி குறித்து டெல்லியில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் அன்றைய தினம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என காணொலி மூலம் கருத்து கேட்டார்.

அதற்கு திமுக கூட்டணி தான் பெஸ்ட் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது எனவும், பாஜவைப்பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத விஜய்யுடன் எப்படி காங்கிரஸ் கூட்டணி வைக்க முடியும் என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் தமிழக காங்கிரசில் கூட்டணி விவாதம் புயலை கிளப்பியது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் திமுக ஆதரவு கருத்தை தெரிவித்ததால், திமுக தலைமையை சமாதானம் செய்யும் வகையில் இறுதிகட்ட முயற்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி களத்தில் இறக்கினார்.

அந்த வகையில், முதல்வருடன் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க திமுக சம்மதம் தெரிவித்தது. ஆனால் 35 தொகுதிக்கு குறைய கூடாது என ராகுல் காந்தி உறுதியாக இருந்துள்ளார். திமுக கூட்டணி தொடர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்பும் நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் திமுக- காங்கிரஸ் கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக திமுக தெரிவித்ததை எடுத்து கூறினர். மேலும் முதல்வரின் வருத்தத்தையும் சோனியா காந்தியிடம் ப.சிதம்பரம் இரவோடு இரவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி முக்கியமல்ல கூட்டணியும், நட்பு தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை ஒப்புக் ெகாண்டது. அதேநேரம் 30 இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு செல்வபெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இறுதியாக கனிமொழியும், சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “முதல்வர் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிடலாம்’’ என்றும் தகவலை மேலிடத்தில் சொல்லியுள்ளார்.

இதை தொடர்ந்து காங்கிரசில் அமைக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு வரும் என தகவல் வெளியானது. இதற்காக நேற்று மாலை 4.30 மணிக்கு கிரிஷ் சோடங்கர் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து நேராக அறிவாலயம் புறப்பட தயாராக இருந்த நிலையில், மேலிடத்தில் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்று என்று கிரிஷ் சோடங்கர் தாமதப்படுத்தி கொண்டே இருந்தார். இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை, சுமுகமாக சென்று வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நாங்கள் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. நோன்புதான் திறந்தோம். எந்த இழுபறியும் இல்லை. டெல்லி காங்கிரஸ் தலைமை முறையான அறிக்கையை எங்களுக்கு அனுப்பும். அதனை நாங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்வோம்’’ என்றார்.

இதையடுத்து, தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு காங்கிரஸ் கட்சியினர் வந்து திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் காங்கிரசார் இருந்தனர். இதையடுத்து இரவு 7.30 மணி அளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு அண்ணா அறிவாலயத்துக்கு காங்கிரஸ் குழுவினர் வருகை தந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரும் அங்கு வந்தனர். பின்னர் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொகுதி பங்கீடு இறுதியானது. இதையடுத்து, திமுக-காங்கிரஸ் இடையே நேற்றிரவு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் திமுக தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தரப்பில் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர். தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து 4வது முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், ‘‘நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென்றும், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.

* தொகுதி பங்கீட்டில் மனநிறைவு: செல்வப்பெருந்தகை
முதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.’ என்றார்.

Related Stories: