அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் விவசாய சங்கத் தலைவர்களை சந்தித்து ராகுல் ஆலோசனை: நாடு தழுவிய இயக்கம் நடத்த திட்டம்

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடத்துவது தொடர்பாக விவசாய சங்கத்தலைவர்களை சந்தித்து ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதன்முறையாக அமெரிக்க விவசாய பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விவசாயத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, ​​இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு நாடு தழுவிய இயக்கத்தின் அவசியம் குறித்தும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

அகில இந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் எஸ் கைரா, அரியானாவின் பாரதிய கிசான் மஸ்தூர் யூனியனைச் சேர்ந்த அசோக் பல்ஹாரா, பி.கே.யு. கிரந்திகாரியை சேர்ந்த பல்தேவ் எஸ் ஜிரா, முற்போக்கு விவசாயிகள் முன்னணியைச் சேர்ந்த ஆர். நந்த்குமார், பி.கே.யு. ஷஹீத் பகத் சிங்கின் அமர்ஜித் எஸ் மோஹ்ரி, கிசான் மஸ்தூர் மோர்ச்சா இந்தியாவின் குராம்நீத் எஸ் மங்காட் மற்றும் ஜே-கே ஜமீதாரா மன்றத்தைச் சேர்ந்த ஹமீத் மாலிக் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

அப்போது இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு நாடு தழுவிய இயக்கத்தின் அவசியம் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ​​விவசாய சங்கத் தலைவர்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் சோளம், சோயாபீன், பருத்தி, பழங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கவலையை வெளிப்படுத்தினர்.

அப்போது ராகுல்காந்தி,’இந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாய இறக்குமதிக்கான கதவைத் திறந்துள்ளது. மேலும் பல பயிர்கள் விரைவில் இறக்குமதி செய்ய வழிவகுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஒரு பெரிய அளவிலான தேசிய இயக்கம் தேவை’ என்று தெரிவித்தார்.

Related Stories: