பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு முடிந்தது: மார்ச்.9 ல் மக்களவை மீண்டும் கூடுகிறது

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானேவின் வெளியிடப்படாத நினைவுக் குறிப்பு குறித்து சூடான விவாதங்களைக் கண்ட பட்ஜெட் கூட்டத்தொடரின் கொந்தளிப்பான முதல் கட்ட அமர்வு நேற்று முடிந்தது. மார்ச் 9ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

கடந்த 2020ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் தொடர்பான மாஜி ராணுவ தளபதி நரவானேயின் நினைவு குறிப்பின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் பிப்.2ம் தேதி மக்களவையில் அமளி ஏற்பட்டது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பியதால் அவையில் அமளி, ஒத்திவைப்பு தொடர் கதையாகியது.

இந்த பிரச்னை தொடர்பாக மேஜைகளில் ஏறி சபாநாயகரை நோக்கி காகிதங்களை வீசி அவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி 7 காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட 8 எம்பிக்கள் பட்ஜெட் கூட்ட தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு அஞ்சி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, ​​பிரதமர் மோடி மக்களவையில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மக்களவையில் பேசவில்லை, ஆனால் மாநிலங்களவையில் இதேபோன்ற விவாதத்திற்கு அவர் பதிலளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச அனுமதிக்காததற்காகவும், எட்டு எம்.பிக்களை சஸ்பெண்ட செய்ததற்காகவும் சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிவதற்காக சுமார் 118 எதிர்க்கட்சி எம்பி.க்கள் நோட்டீசை சமர்ப்பித்தனர்.

தார்மீக காரணங்களுக்காக, தனது நீக்கம் தொடர்பான பிரச்னை தீர்க்கப்படும் வரை அவை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குவதில்லை என்று சபாநாயகர் முடிவு செய்துள்ளார். மார்ச் 9 ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில், சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானம் அவையில் வர வாய்ப்புள்ளது.

இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான நேற்று காலை மக்களவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பி பகவான்தாஸ் ரத்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம் பெற்றுள்ளதால் அவர் பதவி விலக கோரி கோஷங்களை எழுப்பினர். இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் அமளியால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் அவை மீண்டும் கூடிய போது எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் கட்ட அமர்வு நேற்று முடிவடைந்தது. 3 வார விடுமுறைக்கு பின் மக்களவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடும்.

* மாநிலங்களவையும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையும் மார்ச் 9 வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் கேள்வி நேரத்துக்கு பின் மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட் திட்டங்களை நிலைக்குழுக்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கும் வகையில், மாநிலங்களவை நடவடிக்கைகள் மார்ச் 9 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: